செம்மரணம்! சட்டவிரோத பட்டாசு ஆலையில் பயங்கர வெடி பெண் உட்பட 2 பேர் உடல் சிதறி பலி – கோவில்பட்டி அருகே பரபரப்பு!

செம்மரணம்! சட்டவிரோத பட்டாசு ஆலையில் பயங்கர வெடி பெண் உட்பட 2 பேர் உடல் சிதறி பலி – கோவில்பட்டி அருகே பரபரப்பு!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்த இடத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புளியங்குளம் கிராமத்தின் காட்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் ரகசியமாக பட்டாசு தயாரிப்பு நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் கட்டிடம் முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது.

இந்த கோர விபத்தில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த புளியங்குளத்தைச் சேர்ந்த ஐயப்பன் மற்றும் விருதுநகர் மாவட்டம் புல்லகவுண்டன்பட்டியைச் சேர்ந்த மாலதி ஆகியோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சூர்யபிரகாஷ் என்பவர் படுகாயமடைந்தார்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த இரு உடல்களையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த சூர்யபிரகாஷ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் சம்பவ இடத்திற்கு கோவில்பட்டி சார் ஆட்சியர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.