கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த எதிர்ப்பு: தூத்துக்குடியில் ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த எதிர்ப்பு: தூத்துக்குடியில் ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து சிறப்பு வகுப்புகள் நடத்த வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNPGTA) சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆசிரியர்களின் ஓய்வு உரிமையாக உள்ள கோடை விடுமுறையை பாதிக்கும் வகையில், எந்தவித எழுத்துப்பூர்வமான உத்தரவும் இன்றி முதன்மை கல்வி அலுவலர் வாய்மொழி உத்தரவின் மூலம் ஆசிரியர்களை தொடர்ந்து பள்ளிகளுக்கு வரவழைத்துள்ளதாக ஆசிரியர் கழகம் குற்றம்சாட்டியது.

மேலும், கோடை விடுமுறையை “பணிக்காலமாக” மாற்றி ஆசிரியர்களுக்கு தேவையற்ற மனஅழுத்தம் மற்றும் பணிச்சுமை ஏற்படுத்தப்படுவதாகவும், இந்த வாய்மொழி உத்தரவை உடனடியாக ரத்து செய்து ஆசிரியர்களின் விடுமுறை உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் முஜிபுர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் வரவேற்புரை ஆற்றினார். மாநில அமைப்பு செயலாளர் முத்தையா கண்டன உரையாற்றினார். மாவட்ட அமைப்பு செயலாளர் பன்னீர்செல்வம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன் நன்றி உரை ஆற்றினார்.

மேலும், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க தூத்துக்குடி வட்ட தலைவர் தவமணி பீட்டர், தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சங்கர், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் , விருதுநகர் மாவட்ட தலைவர் வாஞ்சிநாதன், திருநெல்வேலி மாவட்ட பொருளாளர் முல்லைவேந்தன், டி.என்.எச்.எச்.எஸ்.எஸ்.ஜி.டி.ஏ மாவட்ட துணை தலைவர் ரஞ்சித் குமார், தமிழக தமிழ் ஆசிரியர்கள் கழக மாவட்ட செயலாளர் ஆதி அருமைநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் கல்வித்துறையிலும் ஆசிரியர்கள் மத்தியிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.