தூத்துக்குடியில் பயங்கரம்: சகோதரியை துன்புறுத்திய கணவர் வெட்டிக்கொலை – மைத்துனர் உள்பட 2 பேர் கைது

தூத்துக்குடியில் பயங்கரம்: சகோதரியை துன்புறுத்திய கணவர் வெட்டிக்கொலை – மைத்துனர் உள்பட 2 பேர் கைது

தூத்துக்குடியில் மனைவியை தொடர்ந்து துன்புறுத்தியதாகக் கூறப்படும் இளைஞரை, மது குடிக்க வருமாறு ஏமாற்றி அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டிக்கொலை செய்த வழக்கில் மைத்துனர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி சக்தி விநாயகர் புரம் 4வது தெருவைச் சேர்ந்த பூலப்பன் மகன் அந்தோணி சேசுராஜ் (27) என்பவர், தாளமுத்துநகர் ஆ.சண்முகபுரத்தைச் சேர்ந்த காசிராஜன் மகளை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, மதுபோதையில் அந்தோணி சேசுராஜ் தனது மனைவியை அடித்து துன்புறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மனமுடைந்த அவரது மனைவி, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோபித்துக் கொண்டு தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார்.

தனது சகோதரியை தொடர்ந்து துன்புறுத்தி வந்த அந்தோணி சேசுராஜ் மீது ஆத்திரமடைந்த மனைவியின் சகோதரரான அருண்குமார் (27), தனது நண்பர்கள் சுதாகர், செல்வகுமார் மற்றும் மேலும் ஒருவருடன் சேர்ந்து கொலை திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.

நேற்று இரவு, தூத்துக்குடி ஸ்டெம் பார்க் பின்புறம் உள்ள கல்லறைத் தோட்டத்திற்கு அந்தோணி சேசுராஜை மது குடிக்க வருமாறு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மது அருந்தியபோது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அந்தோணி சேசுராஜை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

இன்று காலை சம்பவம் குறித்து தகவலறிந்த சிப்காட் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த கொலை வழக்கில் அருண்குமார் மற்றும் அவரது நண்பரான ஆனந்தராஜ் மகன் சுதாகர் (29) ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குடும்பத் தகராறு காரணமாக நிகழ்ந்த இந்த கொலை சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.