திருச்செந்தூர் முருகன் கோவிலில் ₹25 லட்சம் ரசீது மோசடி? பெண் ஊழியர் வீடியோ வெளியிட்டு பரபரப்பு!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ₹25 லட்சம் ரசீது மோசடி? பெண் ஊழியர் வீடியோ வெளியிட்டு பரபரப்பு!

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ரூ.25.25 லட்சம் மதிப்பிலான கட்டண தரிசன ரசீது மோசடி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

திருச்செந்தூர் கோவில் உள்துறை கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமாரிடம் அளித்துள்ள புகாரில், ரூ.100 கட்டண தரிசன ரசீதுகள் வழங்கப்படும் கவுண்ட்டர்களில் பெரிய அளவிலான முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கோவில் நிர்வாகம் மேற்கொண்ட திடீர் ஆய்வில், ஒருங்கிணைந்த கோவில் மேலாண்மை அமைப்பின் பயனர் விவரங்கள் மற்றும் கடவுச்சொற்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, போலி ரசீதுகள் உருவாக்கி கோவில் வருவாயில் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சிசிடிவியில் சிக்கிய பெண் ஊழியர்

இதையடுத்து, ரசீது கவுண்ட்டர்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், தற்காலிக பெண் ஊழியர் மேனகா பணியில் இருந்த நேரங்களில் மட்டுமே போலி ரசீது பரிவர்த்தனைகள் நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.

இதன் மூலம் சுமார் ரூ.25¼ லட்சம் வரை கோவில் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மேனகாவை கடந்த மே 19ஆம் தேதி கோவில் நிர்வாகம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

மேலும், தினசரி ரசீது கணக்குகளை சரிபார்க்க தவறியதாக கூறி கோவில் பணியாளர்கள் பாலமுருகன் மற்றும் உச்சிமாகாளி ஆகியோரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ரூ.5 லட்சம் திருப்பிச் செலுத்தியதாக தகவல்

தணிக்கையின் போது, மேனகா தனது தவறை ஒப்புக்கொண்டு முதற்கட்டமாக ரூ.5 லட்சத்தை கோவில் வங்கி கணக்கில் செலுத்தியதாகவும், மீதமுள்ள தொகையையும் திருப்பிச் செலுத்துவதாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், கோவிலுக்கு பெரும் நிதி இழப்பும் அவப்பெயரும் ஏற்பட்டுள்ளதால், அவர் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோவில் நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.

“என்னை மிரட்டி பணம் பறித்தனர்” – மேனகா வீடியோ

இதற்கிடையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மேனகா வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், “கோவில் உயர் அதிகாரிகள் என்னை அறையில் பூட்டி வைத்து மிரட்டி, என்னிடம் இருந்த ரூ.5 லட்சத்தைப் பறித்துக் கொண்டனர். என் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன” என கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வீடியோ வெளியாகியதையடுத்து, திருச்செந்தூர் கோவில் ரசீது மோசடி விவகாரம் புதிய திருப்பத்தை எடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.