தூத்துக்குடி திரேஸ்புரத்தில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த வாலிபர் கைது!

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த வாலிபர் கைது!

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்த வாலிபரை வடபாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் போதைப்பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, இன்று வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரேஸ்புரம் கடற்கரைச் சாலை பகுதியில், காவல் நிலைய ஆய்வாளர் நீலகண்டன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து மற்றும் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அவர் விற்பனை நோக்கத்திற்காக கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, முத்துகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னையா மகன் சின்னத்துரை (எ) கண்ணன் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து சுமார் 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட சின்னத்துரை மீது வடபாகம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் நடவடிக்கைகள் மாநகரப் பகுதியில் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.