தூத்துக்குடியில் துறைமுகங்களுக்கு இடையே கபடி போட்டி: சென்னை அணி வெற்றி!!

தூத்துக்குடியில் துறைமுகங்களுக்கு இடையே நடந்த கபடி போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி சென்னை அணி கோப்பையை வென்றது.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் அகில இந்திய பெருந்துறைமுகங்களுக்கு கிடையேயான 40-வது கபடிப் போட்டி கடந்த 19-ந் தேதி தொடங்கியது. இப்போட்டியில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், மும்பை துறைமுகம், ஜவர்ஹர்லால் நேரு துறைமுகம், பாரதீப் துறைமுகம், நியூ மங்களூர் துறைமுகம், தீனதயாள் துறைமுகம், சென்னை துறைமுகம், விசாகப்பட்டினம் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டன.
இந்த போட்டிக்கான லீக் போட்டிகள் கடந்த 19-ந்தேதி, 20-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற்றன. இதில், முதல் பிரிவில் சென்னை துறைமுகம், பாரதீப் துறைமுகம் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. 2-வது பிரிவில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், மும்பை துறைமுகம் அணிகள் தகுதி பெற்றன.
இதனைத் தொடர்ந்து அரையிறுதிப் போட்டியில் சென்னை அணி 53-27 என்ற புள்ளிகள் கணக்கில் தூத்துக்குடி அணியை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் மும்பை அணி 51-45 என்ற புள்ளிகள் கணக்கில் பாரதீப் அணியை வென்றது. இதனைத் தொடர்ந்து நடந்த இறுதிப்போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதின. இதில் 47-41 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது. 3-வது இடத்தை தூத்துக்குடி அணியும், பாரதீப் அணியும் பெற்றன.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், வ.உ.சி. துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோகித், அவருடைய மனைவி ஷெபாலி புரோகித் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றி கோப்பை, பதக்கங்கள், சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்கினர்.
இதில் சென்னை அணியைச் சேர்ந்த திருக்குமரன் சிறந்த ரைடருக்கான கோப்பையை பெற்றார். மும்பை அணியைச் சேர்ந்த பிரித்திவிராஜ் ஷிண்டே சிறந்த ஆல்ரவுண்டருக்கான கோப்பையை பெற்றார். இந்த நிகழ்ச்சியில் துறைமுக அலுவலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.