தூத்துக்குடி போலீசில் புதிய அதிரடி! 2024-ல் முதல்வரிடம் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு விருது பெற்ற அதிகாரி – 37-வது எஸ்பியாக சிவபிரசாத் பொறுப்பேற்பு

தூத்துக்குடி போலீசில் புதிய அதிரடி! 2024-ல் முதல்வரிடம் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு விருது பெற்ற அதிகாரி – 37-வது எஸ்பியாக சிவபிரசாத் பொறுப்பேற்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தின் 37-வது காவல் கண்காணிப்பாளராக (SP) ஐபிஎஸ் அதிகாரி சிவபிரசாத் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். 2024 ஆம் ஆண்டு தமிழக முதல்வரிடமிருந்து போதைப்பொருள் தடுப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக "சிறப்பு விருது" பெற்ற அதிகாரி தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் காவல் துறைக்கு தலைமை ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தூத்துக்குடி மாவட்டத்தின் 37-வது காவல் கண்காணிப்பாளராக இன்று பொறுப்பேற்றுள்ளேன். தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி போதைப்பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாவட்டத்தின் தேவைகளை முழுமையாக ஆய்வு செய்து, அதற்கேற்ற புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தின் தன்மையை அறிந்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறை செயல்படும் என்றும், சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்த பல்வேறு புதிய நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

சிவபிரசாத் ஐபிஎஸ் வகித்த முக்கிய பொறுப்புகள்:

  • விருதுநகர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் (ASP)

  • மதுரை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு துணை காவல் ஆணையர் (DCP)

  • சென்னை வாஷர்மென்பேட்டை துணை காவல் ஆணையர்

  • சென்னை அண்ணாநகர் துணை காவல் ஆணையர்

  • மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP)

  • தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

  • சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

2024-ஆம் ஆண்டு தமிழக முதல்வரின் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு விருதைப் பெற்ற அதிகாரியான சிவபிரசாத், தற்போது தூத்துக்குடியில் போதைப்பொருள் ஒழிப்பை முதன்மை இலக்காக கொண்டு செயல்படுவதாக அறிவித்திருப்பது, மாவட்ட மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.