திருச்செந்தூரில் ரூ.18 கோடி புதிய புறநகர்ப் பேருந்து நிலையம்! அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் ஆய்வு – மக்கள் கருத்துக்குப் பிறகே அடுத்தகட்ட பணி!

திருச்செந்தூரில் ரூ.18 கோடி புதிய புறநகர்ப் பேருந்து நிலையம்! அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் ஆய்வு – மக்கள் கருத்துக்குப் பிறகே அடுத்தகட்ட பணி!

திருச்செந்தூரில் பொதுமக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், ரூ.18 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன புறநகர்ப் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தின் முதற்கட்ட பணிகளை தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்தப் பேருந்து நிலையம், திருச்செந்தூர் - திருநெல்வேலி சாலையில் நகராட்சியின் 1-ஆவது வார்டுக்கு உட்பட்ட சுமார் 3.90 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது முதற்கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கட்டுமானப் பகுதிக்கு நேரில் சென்ற அமைச்சர் ஸ்ரீநாத், பணிகளின் தரம் மற்றும் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். நகராட்சி ஆணையர் ஈழவேந்தனிடம் திட்ட வரைபடம் மற்றும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார்.

மேலும், புதிய பேருந்து நிலையம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகள் பெறப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் அதிகாரிகளுடன் விவாதித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதிய பேருந்து நிலையம் அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியருடன் விரிவாக ஆலோசனை நடத்தப்படும். அதன்பின் பொதுமக்களின் கருத்துகள் முழுமையாக கேட்கப்பட்டு, அவர்களின் விருப்பத்தின்படியே அடுத்தகட்ட பணிகள் முன்னெடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

ஆய்வுக்குப் பின்னர் அமைச்சர் ஸ்ரீநாத் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

இந்த ஆய்வின் போது நகராட்சிப் பொறியாளர் சரவணன், பணி மேற்பார்வையாளர் செல்வராஜ், சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தவெக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.