திருச்செந்தூர் அருகே பிரபல ரவுடி மரிய அந்தோணி ஆக்னல் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கைது – எஸ்.ஐ ராஜபிரபு காயம்

திருச்செந்தூர் அருகே பிரபல ரவுடி மரிய அந்தோணி ஆக்னல் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கைது – எஸ்.ஐ ராஜபிரபு காயம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி மரிய அந்தோணி ஆக்னலை போலீசார் துப்பாக்கிச்சூட்டில் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் காவல் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) ராஜபிரபு காயமடைந்தார்.

தூத்துக்குடி மினி சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த மரிய அந்தோணி ஆக்னல் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அண்மையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திலும் அவர் தொடர்புடையவர் என கூறப்படுகிறது.

இந்த வழக்கில் மரிய அந்தோணி ஆக்னலை கைது செய்ய தனிப்படை எஸ்.ஐ ராஜபிரபு தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், திருச்செந்தூர் அருகே குரும்பூர் பகுதியில் உள்ள சோனகன் விளை – கானியாளர்புதூர் விளை முத்தாரம்மன் கோவில் தெரு பகுதியில் அவர் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அந்த பகுதிக்கு சென்று மரிய அந்தோணி ஆக்னலை சுற்றிவளைத்து கைது செய்ய முயன்றனர். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து போலீசாரை மிரட்டியதுடன் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் எஸ்.ஐ ராஜபிரபு காயமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மரிய அந்தோணி ஆக்னலின் மீது குண்டு பாய்ந்தது. பின்னர் அவரை கைது செய்த போலீசார் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காயமடைந்த எஸ்.ஐ ராஜபிரபுவுக்கும் அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கிச்சூட்டில் கைது செய்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.