சேவைக் குறைபாடு: பொதுத் துறை வங்கி ரூ.30 ஆயிரம் வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!

சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட நீதி மன்ற பணியாளருக்கு பொதுத்துறை வங்கி ரூ.30,000 வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்ட நீதி மன்றத்தில் அலுவலக பணியாளராக பணியாற்றி வரும் விளாத்திகுளம் தாலுகாவைச் சார்ந்த கார்த்திக்ராஜா என்பவர் விளாத்திகுளத்தில் உள்ள ஒரு பொதுத் துறை வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார். இதன் மூலம் ஒரு ஏடிஎம் அட்டையும் பெற்றுள்ளார்.
இந்த ஏடிஎம் அட்டையின் மூலம் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகிலுள்ள ஒரு ஏடிஎம் மெஷினில் பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார். புகார்தாரரின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்ததாக குறுஞ் செய்தி மட்டும் வந்துள்ளது. ஆனால் பணம் வரவில்லை. இது குறித்து வங்கியிடம் புகார் தெரிவித்துள்ளார். அதற்கு வங்கி நிர்வாகம் உங்களது கணக்கில் ஓரிரு நாட்களில் அந்தப் பணம் திரும்ப செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால் பணம் திரும்பக் கிடைக்கவில்லை. இதைக் கண்ட புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ.20,000, வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 ஆக மொத்தம் ரூ.30,000 ஐ ஆறு வார காலத்திற்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் அத் தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9% வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.