“அதிமுக ஆட்சியை முடக்கிய ஸ்டாலின்… ‘நம்பர் ஒன் தமிழ்நாடு’ உருவாக்கம் – பாஜக தடைகளை தகர்த்தெறிவோம்! அமைச்சர் கீதாஜீவன் ஆவேசம்

“அதிமுக ஆட்சியை முடக்கிய ஸ்டாலின்… ‘நம்பர் ஒன் தமிழ்நாடு’ உருவாக்கம் – பாஜக தடைகளை தகர்த்தெறிவோம்! அமைச்சர் கீதாஜீவன் ஆவேசம்

அதிமுக ஆட்சியில் முடங்கி கிடந்த தமிழகத்தை “நம்பர் ஒன் மாநிலம்” ஆக மாற்றியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றும், பாஜக அரசின் தடைகளை தகர்த்தெறிந்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் என்றும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆவேசமாக தெரிவித்தார்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1ம் கேட் காந்தி சிலை பகுதியில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தெருமுனை பிரச்சார கூட்டத்தில் மாநகர் திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். இதில் மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், 2021ஆம் ஆண்டு முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்தது. அதிமுக ஆட்சியில் முடங்கியிருந்த தமிழகத்தை மீட்டெடுத்து, ஆக்சிஜன் தட்டுப்பாட்டை ரயில்கள் மூலம் சரிசெய்து, ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்றியதாக கூறினார்.

மேலும், பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.4000 வழங்கப்பட்டது, “மக்களை தேடி மருத்துவம்” திட்டம் மூலம் வீடு தேடி சிகிச்சை அளிக்கப்பட்டது, காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட திட்டங்கள் மக்களுக்கு பயனளித்து வருவதாகவும் குறிப்பிட்டார். 1.31 கோடி பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளதுடன் வறுமை குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழகம் வளர்ச்சியில் முன்னணியில் இருப்பதாக கூறிய அவர், மாநிலம் 11.9 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளதாக ஒன்றிய அரசின் புள்ளிவிவரமே உறுதி செய்துள்ளதாக தெரிவித்தார். ₹12 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் மூலம் தொழிற்சாலைகள் உருவாகி, வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை, டைட்டல் பார்க், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், 210 புதிய டிரான்ஸ்பார்மர்கள், 13 நகர்நல மையங்கள் போன்ற பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.

மத்திய அரசை விமர்சித்த அவர், பாஜக அரசு பல நிதிகளை நிறுத்தியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்க முயன்றதாக குற்றம்சாட்டினார். ஒற்றை கல்விக் கொள்கை மற்றும் உணவு கொள்கைகள் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் கூறினார்.

கல்வி மற்றும் பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசுகையில், உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், 52 பேர் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். பெண்களின் பொருளாதார முன்னேற்றம் 42 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், வெளிநாடு கல்விக்காக மாணவர்களுக்கு ரூ.30 முதல் 40 லட்சம் வரை உதவி வழங்கப்படுவதாகவும் கூறினார்.

இறுதியாக, தமிழகத்தின் வளர்ச்சி தொடர்ந்து நிலைக்க, மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைய பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக்கொண்டார்.

இதில்  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் திரு. ஏ.பி.சி. சண்முகம் அவர்கள் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சியே தொடர வேண்டும் என்று உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட பொருளாளர் சுசி ரவீந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜமோகன் செல்வின், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், வட்டச் செயலாளர் சாமிநாதன் மற்றும் 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநகர மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மாடசாமி, தனலட்சுமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி முத்து, மதிமுக நிர்வாகி நக்கீரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி விமல் வங்காளியார், தேமுதிக நிர்வாகிகள் தயாள லிங்கம், வல்லரசு துரை, சமத்துவ மக்கள் கழக நிர்வாகி அற்புதராஜ், மக்கள் நீதி மய்ய நிர்வாகி ஜவகர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மீராசா, மனிதநேய மக்கள் கட்சி யூசுப், மனிதநேய ஜனநாயக கட்சி முகமது ஹசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.