தமிழ்நாடு – டெல்லி அரசியல் மோதல்! பஞ்ச் டயலாக் அரசியலை அமைச்சர் கீதா ஜீவன் சாடல்

தமிழ்நாடு – டெல்லி அரசியல் மோதல்! பஞ்ச் டயலாக் அரசியலை அமைச்சர் கீதா ஜீவன் சாடல்

துண்டை காணும் துணிய காணோம் என்று ஓடியவர்கள் இன்று மேடையில் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். 

தமிழ்நாடு அரசியலில் சூடுபிடிக்கும் தேர்தல் சூழல்… அமைச்சர் கீதா ஜீவன் அதிரடி பேச்சு!

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி 39 ஆவது வார்டுக்குடபட்ட தேரடி பகுதியில் திமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

 பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், 

கொரோனா காலத்தில் தமிழ்நாடு மிக கடினமான சூழ்நிலையை சந்தித்தது. பல ஏழை மக்கள் சிறிய வீடுகளில் வசித்து, வேலை இல்லாமல், வருமானம் இல்லாமல் குடும்பங்களை நடத்துவதற்கே சிரமப்பட்ட நிலை இருந்தது,

அத்தகைய சூழலில் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனே மு.க. ஸ்டாலின் அதிகாரிகளை அழைத்து மருத்துவமனைகள் மற்றும் படுக்கைகள் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தார். அந்த காலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதால், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு .

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்காலிக மருத்துவமனைகள் தொடங்கப்பட்டதுடன், மக்களுக்கு தடுப்பூசி போட அரசு தொடர்ந்து வலியுறுத்தியது. மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதோடு, வாழ்க்கை முறை பாதிக்காமல் கடைகள் திறந்து தொழில்களை மீண்டும் தொடங்க அரசு அனுமதி வழங்கியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

உலகில் பலரும் அச்சப்பட்ட நேரத்தில், கொரோனா நோயாளிகள் இருந்த வார்டுகளுக்கே நேரில் சென்று அவர்களின் நிலையை பார்த்த ஒரே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் .

அந்த காலத்தில் மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். அவர்களின் சேவையை அரசு பாராட்டி, பலருக்கு நிரந்தர பணியிட வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா காலத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் மக்கள் மத்தியில் இருந்து சேவை செய்தது, முகக்கவசங்கள், மருந்துகள் வழங்கி கிருமி நாசினி தெளித்ததோடு, இறந்தவர்களின் இறுதி சடங்குகளுக்கும் உதவியதாகவும் இருந்தனர். 

இந்நிலையில் தற்போது தேர்தல் நெருங்கியுள்ளதால் பல கட்சிகள் மக்கள் மத்தியில் வந்து பேசுகின்றன. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் சந்தித்த பிரச்சினைகளில் அவர்கள் எங்கே இருந்தார்கள் என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

வெள்ளப் பாதிப்பு போன்ற நேரங்களிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரே மக்களுடன் இருந்துகளத்தில் நின்று தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க செயல்வீரர்களாக உதவி செய்தனர். 

அன்றைய தினம் துண்டை காணும் துணிய காணோம் என்று ஓடியவர்கள் எல்லாம் தற்போது மேடை போட்டு வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களது பேச்சை எல்லாம் கேட்கும்போது எரிச்சல் கூட வருகிறது. என்ன இவ்வளவு சின்னத்தனமாக அரசியல் செய்கிறார்கள் என்று தோன்றுகிறது. மக்களை எல்லாம் முட்டாள்கள் என்று நினைத்துக்கொண்டு பேசுகிறார்கள்,” என்று கூறினார்.

மேலும் சிலர் வெறும் “பஞ்ச் டயலாக்” பேசுவதற்காகவே அரசியல் மேடையில் வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். “இயக்குனர் எழுதி கொடுத்த வசனம் போல பஞ்ச் டயலாக் மட்டும் பேசுகிறார்கள். அதில் எந்த அர்த்தமும் இல்லை. அவர்கள் சொல்வதிலும் பொருள் இல்லை,” என்றார்.

 புதிய கட்சிகளாக வந்தவர்களுக்கும் அரசியல் அனுபவம் இல்லாததால் அவர்கள் கூறும் வாக்குறுதிகளுக்கும் எந்த அடிப்படையும் இல்லை,”.

அரசியல் என்பது வெறும் பேச்சால் மட்டுமே நடத்தப்படக்கூடிய ஒன்று அல்ல , அதற்கான அனுபவமும் நிர்வாக அறிவும் தேவை . “நாங்கள் அரசியல் தெரிந்தவர்கள். அரசு நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்பதையும் அறிந்தவர்கள். எதை செய்ய முடியும், எதை செய்ய முடியாது, எந்த திட்டத்திற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவை, எந்த திட்டத்தை மாநில அரசு தனியாக செயல்படுத்த முடியும் என்பதையும் நாங்கள் நன்றாக அறிந்திருக்கிறோம்,” 

முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தலில் அளித்த 404 வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், குடிநீர் வசதி, சாலை, மழைநீர் வடிகால், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளது . 

தூத்துக்குடி தொகுதியில் மட்டும் 210 மின் ட்ரான்ஸ்பார்மர்கள் நிறுவப்பட்டுள்ளதுடன், 13 புதிய மருத்துவமனைகளும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் நீண்டகாலமாக இருந்த குடிநீர் தட்டுப்பாடு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது. 

மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் மூலம் பெண்கள் மற்றும் ஏழை மக்களுக்கு அரசு உதவி வழங்கி வருகிறது, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கு கூடுதல் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.

தமிழ்நாட்டின் கலாச்சாரம், மொழி மற்றும் வரலாற்றை பாதுகாக்கும் நோக்கில் அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கீழடி உள்ளிட்ட அகழ்வாராய்ச்சி பணிகளில் மத்திய அரசு அனுமதி வழங்காமல் வருகிறது. தமிழர்களின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளான நாகரிக வரலாற்றை உலகுக்கு நிரூபிக்கும் ஆய்வுகளை தடுக்க முயற்சி நடக்கிறது .

மேலும், பெரிய நிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, விவசாயிகள் மற்றும் சாதாரண மக்களின் கடன்களை தள்ளுபடி செய்ய தயங்குகிறது .

இந்த போர் தமிழ்நாடு அணிக்கும் டெல்லி அணிக்கும் நடக்கும் போர், தமிழ்நாட்டின் வளர்ச்சி, தமிழ் மொழி மற்றும் மக்களின் உரிமைகளை பாதுகாக்க மீண்டும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைவது அவசியம்.

  என்றும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

இதில் காங்கிரஸ் கட்சி மாநில துணைத் தலைவர் ஏ பி சி வி சண்முகம், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.