தூத்துக்குடி பனிமய மாதா தங்கத் தேர் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது!
தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலய தங்கத் தேர் திருவிழா நாளை ஜூலை 26ஆம் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலய தங்கத் தேர் திருவிழா நாளை ஜூலை 26ஆம் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமயமாதா பேராலயம் ரோம் நகரின் பசிலிக்கா அந்தஸ்து பெற்றது. முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் ஆண்டுகளில் மட்டும் தங்கத்தேர் பவனி நடைபெறுவது வழக்கம். அதன்படி தூத்துக்குடி மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு தங்கத்தேர் பவனி நடக்கிறது. இந்த பேராலயத்தின் 441-ஆம் ஆண்டு திருவிழா மற்றும் 16-வது தங்கத் தேர் திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 5.45 மணிக்கு 2-ம் திருப்பலியும் நடக்கிறது. 7 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. 8.30 மணியளவில் பேராலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடி ஏற்றப்படுகிறது. மதியம் 12 மணிக்கு அன்னைக்கு பொன் மகுடம் அணிவித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்கத்தேர் பவனி வருகிற ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி நடக்கிறது. விழாவையொட்டி அதிகாலை 5.15 மணிக்கு பெருவிழா கூட்டுத் திருப்பலியும், காலை 7 மணிக்கு தங்கத்தேர் சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. தங்க தேர் திருப்பலியை கோவா உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினாய்க் பிலிப் நேரி நடத்துகிறார். அதுபோல் தங்கத்தேர் பவனியை கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் ஜெபம் செய்து தொடங்கி வைக்கிறார்.
இதனை தொடர்ந்து முக்கிய வீதிகளில் அன்னையின் தங்கத் தேர் பவனி நடக்கிறது. மதியம் 12.30 மணிக்கு தங்கத் தேர் நன்றி திருப்பலியும், மாலை 4 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலியும் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியன நடக்கிறது. விழாவில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயர்கள், பங்குத்தந்தைகள் பங்கேற்று சிறப்பு திருப்பலி நடத்துகின்றனர். மேலும் இந்த விழாவில் வெளிநாடு மற்றும் இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர். மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை சார்பில் திருவிழா ஏற்பாடுகளை செய்யப்பட்டு வருகின்றன.