தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரின் மெத்தன போக்கால் இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை உயிர் பலி: வாலிபர் சங்கத்தினர் குற்றச்சாட்டு!

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரின் மெத்தன போக்கால் இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை உயிர் பலியானதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் குற்றம் சாட்டியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரின் மெத்தன போக்கால் இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை உயிர் பலி: வாலிபர் சங்கத்தினர் குற்றச்சாட்டு!

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரின் மெத்தன போக்கால் இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை உயிர் பலியானதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் இ.சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, கீழ அரசடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட அய்யனார்புரம் கிராமத்தைச் சேர்ந்த உப்பள வாகன ஓட்டுனர் சுடலைமணி கடந்த மே 24 அன்று இரவில் இருசக்கர வாகன விபத்தில் காயம் அடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குளத்தூர் காவல்துறையினரின் மேற்பார்வையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

24 ஆம் தேதி இரவு 11:30 மணிக்கு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுடலைமணியை இரண்டு நாட்களாக சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் ஏதும் காவல்துறை சார்பில் கொடுக்காமல் மெத்தன போக்குடன் நடந்துள்ளனர். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தும், அதில் வாகன ஓட்டியின் வாகன எண் குறிப்பிடப்பட்டு இருந்தும், முழுமையாக விசாரிக்காமல் காயமடைந்தவரின் குடும்பத்தினருக்கு காவல்துறையினர் தகவல் ஏதும் அளிக்காமல் இருந்துள்ளனர். 

அப்படி இருக்கையில் இரண்டு நாட்கள் கழித்து, மே 26 ஆம் தேதியான இன்று காலை 11:30 மணியளவில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு சுடலைமணி இறந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் தகப்பனாரை இழந்த குடும்பம் கடும் பேரதிர்ச்சிக்குள் உள்ளாயிருக்கிறது. காவல்துறையினர் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்காததால் குடும்பத்தினருக்கு தெரியாமலேயே எம் மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது என்கிற விவரம் தெரிவிக்காமலேயே அவர் இறந்துள்ளார். இன்று உறவினர்கள் குளத்தூர் காவல் நிலைய காவலரிடம் பேசும் போது "எங்களுக்கு இதை மட்டுமா விசாரிக்க நேரம் இருக்கு நிறைய பிரச்சனை நடந்து இருக்கிறது அதை எல்லாம் நாங்க பார்க்க வேண்டாமா... இதை மட்டுமே நாங்க வந்து பார்த்துகிட்டு பின்னாடியே அலைய முடியுமா... முடிஞ்சா பிணத்தை வாங்குங்க.. இல்லனா உங்க பாட்டுக்கு போய்கிட்டே இருக்கேன் அது பாட்டுக்கு அனாதை பிணமாக இருந்துட்டு போகட்டும்" அப்படின்னு ரொம்ப அதிகார தோரணையோடும் ஆணவத்தோடும் பேசியுள்ளார். இதனால் அந்த குடும்ப உறுப்பினரை இழந்து வாடி வரும் குடும்பத்தினரை இது கடும் மன உளைச்சலுக்கு தள்ளி உள்ளது. 

எனவே மெத்தனபோக்குடன் நடந்த காவல்துறையினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினர் முறையாக தகவல் அளிக்காததால், மேல் சிகிச்சைக்கு எதுவும் அனுமதிக்கப்படாமலிருந்ததால், தற்போது தந்தையை இழந்து வருமானத்திற்கு வழியின்றி வாடும் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும். என கூறியுள்ளார்.