காா் மோதி இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3.10 கோடி : தூத்துக்குடி மக்கள் நீதிமன்றம் உத்தரவு!!

காா் மோதி இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3.10 கோடி : தூத்துக்குடி மக்கள் நீதிமன்றம் உத்தரவு!!

தூத்துக்குடியில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3.10 கோடி வழங்குமாறு காரின் உரிமையாளா், காப்பீட்டு நிறுவனத்துக்கு தூத்துக்குடி மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி துறைமுகம் பிரிவு 3-ஐ சோ்ந்தவா் செண்பகவள்ளி. இவரது கணவா் 2016ஆம் ஆண்டு கடற்கரைச் சாலையில் பைக்கில் சென்றபோது காா் மோதி உயிரிழந்தாா். அதையடுத்து, நஷ்டஈடு கோரி செண்பகவள்ளி வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு தூத்துக்குடி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

இந்நிலையில், சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பினரிடையே பேசியதில் ஏற்பட்ட சமரசத்தின் அடிப்படையில், செண்பகவள்ளியின் குடும்பத்துக்கு காரின் உரிமையாளரும், காப்பீட்டு நிறுவனமும் ரூ.3.10 கோடி வழங்குமாறு முதன்மை மாவட்ட நீதிபதி ஆா். வசந்தி முன்னிலையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலரும் மூத்த உரிமையியல் நீதிபதியுமான கலையரசி ரீனா, ஓய்வுபெற்ற நீதிபதி முத்துராஜ், மூத்த பட்டியல் வழக்கறிஞர் யூஜியானா உள்ளிட்டோா் உடனிருந்தனா். செண்பகவள்ளி தரப்பில் வழக்கறிஞர்கள் இளையராஜா, காப்பீட்டு நிறுவனம் தரப்பில் ஆண்ட்ரூ மணி ஆகியோா் ஆஜராகினா்.