திருச்செந்தூர் புதிய பேருந்து நிலையம்: மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

திருச்செந்தூர் புதிய பேருந்து நிலையம்: மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

திருச்செந்தூரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீது விசாரணை நடத்திய மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளை, இந்த விவகாரம் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், திருச்செந்தூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாகவும், ஆனால் பொதுமக்களின் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தாமல் நடவடிக்கை எடுப்பது சட்டவிரோதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களின் கருத்தை கேட்டுப் பிறகே திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், "இதே கோரிக்கையுடன் தொடர்புடைய மற்றொரு வழக்கு ஏற்கனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது" என்று தெரிவித்தார்.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.