சாத்தான்குளம் அருகே பரிதாபம்: நண்பர்களுடன் குளிக்க சென்ற 6 வயது சிறுவன் ஊருணியில் மூழ்கி உயிரிழப்பு – தூத்துக்குடி மாவட்டத்தில் சோகம்

சாத்தான்குளம் அருகே பரிதாபம்: நண்பர்களுடன் குளிக்க சென்ற 6 வயது சிறுவன் ஊருணியில் மூழ்கி உயிரிழப்பு – தூத்துக்குடி மாவட்டத்தில் சோகம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து கிராமத்தில், ஊருணியில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 6 வயது சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

படுக்கப்பத்து கிராமத்தைச் சேர்ந்த மேரி என்பவரின் மகன் ரியான் (6), அப்பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்த பின், ரியான் தனது நண்பர்களுடன் ஊர் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.

பின்னர் அவர்கள் அருகிலிருந்த ஊருணிக்குச் சென்று குளித்துள்ளனர். அப்போது தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்த ரியான், எதிர்பாராத விதமாக ஊருணியின் ஆழமான பகுதிக்குச் சென்றதாக கூறப்படுகிறது. நீச்சல் தெரியாததால் சிறுவன் தண்ணீரில் மூழ்கித் தத்தளித்துள்ளான்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனடியாக ஊருக்குள் ஓடி சென்று கிராம மக்களிடம் தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் தட்டார்மடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவன் ரியானின் உடலை மீட்டனர்.

பின்னர் அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக தட்டார்மடம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) இசக்கித்துரை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விளையாடச் சென்ற சிறுவன் ஊருணியில் மூழ்கி உயிரிழந்த இந்த சம்பவம் படுக்கப்பத்து கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.