திருச்செந்தூர் சிக்கிய ‘VIP தரிசன’ லஞ்ச கும்பல்! முகமூடி அணிந்து வந்த அமைச்சர் ரமேஷ்… ரூ.4,000 GPay அனுப்பிய அடுத்த நொடி நடந்த அதிரடி!

திருச்செந்தூர் சிக்கிய ‘VIP தரிசன’ லஞ்ச கும்பல்! முகமூடி அணிந்து வந்த அமைச்சர் ரமேஷ்… ரூ.4,000 GPay அனுப்பிய அடுத்த நொடி நடந்த அதிரடி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விசேஷ மற்றும் VIP தரிசனத்திற்காக பக்தர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுவதாக வந்த தொடர்ச்சியான புகார்களை அடுத்து, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் இன்று அதிகாலை நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

முன்கூட்டியே எந்த தகவலும் வழங்காமல், தனது காரை கோயிலுக்கு வெளியே நிறுத்திய அமைச்சர், சாதாரண டி-ஷர்ட் மற்றும் முகமூடி அணிந்து உதவியாளருடன் பக்தரைப் போல கோயிலுக்குள் நுழைந்தார்.

அங்கு விரைவாக சாமி தரிசனம் செய்ய என்ன செய்ய வேண்டும் என உதவியாளர் மூலம் அர்ச்சகர்களிடம் விசாரிக்கச் செய்தார். அமைச்சர் என்பதை அறியாத அர்ச்சகர்கள், “தலைக்கு ரூ.1,000 வீதம் நான்கு பேருக்கு ரூ.4,000 கொடுத்தால் உடனே VIP தரிசனம் ஏற்பாடு செய்கிறோம்” என பேரம் பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, “கையில் ரொக்கம் இல்லை” என கூறிய அமைச்சர், அங்கிருந்த அர்ச்சகரின் GPay எண்ணிற்கு நேரடியாக ரூ.4,000 அனுப்பியுள்ளார். பணம் வந்து சேர்ந்ததை உறுதி செய்த அடுத்த நொடியில் அமைச்சர் தனது முகமூடியை கழற்றி உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்தினார்.

டிஜிட்டல் பரிவர்த்தனை ஆதாரத்துடன் அர்ச்சகர்கள் மற்றும் தொடர்புடைய ஊழியர்கள் கையும் களவுமாக சிக்கியதால் கோயில் வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள் மற்றும் அறநிலையத் துறை ஊழியர்களை கோயில் அலுவலகத்திற்கு வரவழைத்த அமைச்சர் ரமேஷ், அவர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வமான மன்னிப்புக் கடிதம் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், திருச்செந்தூர் கோயிலின் சொத்துக்கள், வருவாய், VIP தரிசன நடைமுறைகள் மற்றும் நிர்வாக செயல்பாடுகள் குறித்து அமைச்சர் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், கோயிலில் நீண்டகாலமாக நடைபெற்று வந்த முறைகேடுகள் குறித்து விரைவில் பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.