வ.உ.சி. துறைமுகத்தில் காற்றாலை, சோலார் மூலம் ஒரே மாதத்தில் 15 லட்சம் யூனிட் மின் உற்பத்தி!

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ஒரே மாதத்தில் காற்றாலை, சூரிய மின்நிலையம் மூலம் 15 லட்சம் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்து சாதனை படைத்து உள்ளது.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பசுமை துறைமுகமாக மாற்றுவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அதன்படி வ.உ.சி. துறைமுகத்தில் தரையில் பொருத்தப்பட்ட சூரிய மின்நிலையம், காற்றாலை மின்நிலையம், மேற்கூரை சூரிய மின்நிலையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் துறைமுகத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதே போன்று காற்றும் அதிக அளவில் வீசுவதால், காற்றாலை மற்றும் சூரிய மின்நிலையம் மூலம் அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த மாதம் (ஜூன்) இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக 15 லட்சத்து 30 ஆயிரத்து 614 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இது இதற்கு முன்பு அதிகபட்சமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11 லட்சத்து 29 ஆயிரத்து 235 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் வ.உ.சி. துறைமுகம் 2025-26 நிதிஆண்டில் ஜூன் மாதம் வரை 1 லட்சத்து 29 ஆயிரத்து 571 உணவுக்கான எண்ணெய் கையாண்டு உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கையாளப்பட்டதை விட 7.58 சதவீதம் வளர்ச்சி ஆகும்.