தூத்துக்குடி 1ம் & 2ம் கேட் போக்குவரத்து நெரிசல்: மேம்பாலம் கட்ட முயற்சி – அமைச்சர் கீதா ஜீவன்

தூத்துக்குடி 1ம் & 2ம் கேட் போக்குவரத்து நெரிசல்: மேம்பாலம் கட்ட முயற்சி – அமைச்சர் கீதா ஜீவன்

தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் உள்ள 1ம் மற்றும் 2ம் ரயில்வே கேட் பகுதிகளில் அடிக்கடி கேட் மூடப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்கள், அலுவலக பணியாளர்கள், அவசர தேவைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் என அனைவரும் தினமும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த பிரச்சனை குறித்து நமது டூட்டி விஷன் இணையதள  செய்தி தளத்தில் முன்பே செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து மக்கள் எதிர்பார்ப்புடன் தீர்வு கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

இந்நிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் அளித்துள்ளார்.

“ரயில்வே மேம்பாலம் அமைப்பது குறித்து பொறியாளருடன் ஆலோசித்து வருகிறேன். சதர்ன் ரயில்வே ஜிஎம் உடன் கலந்தாலோசித்து முடிவு எடுப்போம்,” என்று அவர் தெரிவித்தார்.

1ம் கேட் நீண்ட நேரம் மூடப்பட்டிருப்பதால் 2ம் கேட் பகுதியில் மக்கள் அதிக சிரமம் அனுபவிக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

மேலும், பத்திரகாளியம்மன் கோவில் அருகே நடைமேம்பாலம், 4ம் கேட்டில் மேம்பாலம் மற்றும் நிகிலேசன் நகர் பகுதியில் நடைமேம்பாலம் அமைப்பது அவசரத் தேவையாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த கோரிக்கைகளை கனிமொழி எம்பியிடம் தேர்தல் அறிக்கையில் சேர்க்க வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

“அடுத்த கட்ட முயற்சி கட்டாயம் எடுக்கப்படும்,” என்றும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில், தூத்துக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 2ம் கேட் மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்குமா? அல்லது தேர்தல் கால வாக்குறுதியாக மாறிவிடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தூத்துக்குடி மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பதை பொருந்திருந்து பார்ப்போம்.