தூத்துக்குடியில் ஒரே நாளில் 3பேர் தற்கொலை!

தூத்துக்குடியில் வெவ்வேறு சம்பவங்களில் காதல் தோல்வி உட்பட பல்வேறு பிரச்சனை காரணமாக ஒரே நாளில் 3பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
தூத்துக்குடி பூபால் ராயபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் சேஷய்யா மகன் சேவியர் (51) இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டாராம். அதிலிருந்து சேவியர் மது போதைக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி செல்வி சத்தம் போட்டதாக தெரிகிறது. இதனால் மன வேதனை அடைந்த சேவியர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
வாலிபர் தற்கொலை
தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோட்டைச் சேர்ந்தவர் கருத்தபாண்டி மகன் ராஜ்குமார் (23). இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுமாம். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராஜ்குமார் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
டிரைவர் தற்கொலை
தூத்துக்குடி தாளமுத்து பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மாரிமுத்து (20), ரோடு வேன் டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெண் இவரது காதலை ஏற்றுக் கொள்ளவில்லையாம். இதனால் மனமுடைந்த மாரிமுத்து தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பொறுப்பு பிரேம் ஆனந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்