அதிமுக வேட்பாளர் களமே தெரியாதவர்...தூத்துக்குடி தொகுதியில் திமுக “50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி உறுதி - அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடியில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து பின்னர் செய்தியாளர் சந்தித்த அவர் கூறுகையில் 

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக (திமுக) வேட்பாளராக மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி., கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலமைச்சரின் பல்வேறு நலத்திட்டங்களை தொகுதிக்கு கொண்டு வந்ததன் அடிப்படையில் மக்களிடம் நம்பிக்கையுடன் செல்ல உள்ளேன் . கொரோனா, பெருவெள்ளம் உள்ளிட்ட அனைத்து அவசர சூழ்நிலைகளிலும் மக்களுடன் இருந்து பணியாற்றி, எந்த நிலையிலும் மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளேன்.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வலிமையான கூட்டணியாக உள்ளது , முதலமைச்சர் அறிவித்தபடி தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம். தூத்துக்குடி, விளாத்திக்குளம், கோவில்பட்டி ஆகிய தொகுதிகளில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் திமுக  வேட்பாளர்கள் விளாத்திகுளம் ஜி. வி.மார்க்கண்டேயன் , கோவில்பட்டி கருணாநிதி உறுதியாக வெற்றி பெறுவார்கள் என்றும் கூறினார்.

முதலமைச்சர் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளில்  மகளிருக்கு ரூ.8000 கூப்பன், காலை உணவுத் திட்ட விரிவாக்கம், மாணவர்களுக்கு லேப்டாப், மகளிர் உரிமைத்தொகை உயர்வு, விவசாயிகளுக்கு நவீன பம்பு செட், நகரப்பகுதிகளில் வீடுகள், கோயில் சீரமைப்பு உள்ளிட்ட பல திட்டங்களை வீடு தோறும் எடுத்துச் சென்று விளக்க உள்ளோம். “சொன்னதை செய்வோம், செய்வதைதான் சொல்வோம்” என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளதே திமுக தேர்தல் அறிக்கையின் பலம் என்று  கூறினார்.

தூத்துக்குடி தொகுதியில்   சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத புதிய தொழிற்சாலைகள், SIPCOT வளாகத்தில் மல்டி லெவல் லாஜிஸ்டிக்ஸ் பார்க், சாலை மற்றும் மேம்பால வசதிகள் உள்ளிட்ட பல திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் .

அதிமுக வேட்பாளர் குறித்து கடும் விமர்சனம்

அதிமுக வேட்பாளர் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கீதாஜீவன், “இப்போது போட்டியிடும் அதிமுக வேட்பாளர் களமே தெரியாதவர். கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்தப் பிரச்சனையிலும் மக்களுடன் இருக்கவில்லை. வெள்ளம், மழை போன்ற அவசர காலங்களில் காணாமல் போயிருந்தவர்கள், தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து நிற்பவர்கள்” என கடுமையாக விமர்சித்தார்.

மேலும், “மக்களுடன் தினமும் இருந்தவர் யார், அல்லும் பகலும் உழைத்தவர் யார் என்பதை மக்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள். அதனால் திமுக 50,000-க்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

மழை மற்றும் வெள்ளநிலை தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு  , “முதலமைச்சர், அமைச்சர்கள் நேரில் வந்து நிலைமையை பார்வையிட்டனர். நாங்களும் பகல் இரவு பாராமல் மக்களுடன் இருந்தோம். செய்யப்பட்ட பணிகள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. பாதியில் வேலை நிறுத்தப்பட்டது என்பது உண்மையல்ல” .

மேலும், “திட்டங்களை கொண்டு வந்தது தற்போதைய அரசு. அவை முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. உண்மை நிலைமையை அறியாமல் சிலர் பேசுகின்றனர்” . என்றும் கீதாஜீவன் தெரிவித்தார்.