தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் முழு மின் உற்பத்தி..!
பெருவெள்ளம் பாதிப்பிற்கு பின்னர், சீரமைக்கப்பட்டு தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் முழுமையாக மின்சார உற்பத்தி தொடங்கி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பெய்த பெருமழை காரணமாக, தூத்துக்குடி அனல் மின் நிலையம் மிக மோசமாக வெள்ளத்தால் சூழப்பட்டது. அனல் மின் நிலையம் கடல் மட்டத்திற்கு கீழே இருப்பதால் வெள்ள நீரை வெளியேற்றுவது மிகச்சவாலான பணியாக இருந்தது. அனல்மின் நிலைய குடியிருப்புகளிலும் மின்சாரம், குடிநீர் துண்டிக்கப்பட்டு மோசமாக பாதிக்கப்பட்டது.
அனல் மின் நிலையத்தின் நிலக்கரி கையாளும் பகுதிகள், ‘சுவிட்ச் யார்டு’, எரி எண்ணெய் கையாளும் பகுதி, கடலில் இருந்து குளிர்வு நீர் கொண்டு வரும் பாதைகள் மற்றும் வேதியியல் தொழில்நுட்ப பகுதி ஆகியவை என அனைத்தும் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. அத்துடன், அனல் மின் நிலையத்தை ஒட்டிய துறைமுக பகுதியில் பெருமழை வெள்ளத்தில் சாம்பல் அடித்து வரப்பட்டு குளிர்வு நீர் பாதைகள் 1 மற்றும் 2 ஆகியவை முற்றிலுமாக சாம்பலால் அடைபட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் பாதுகாப்பு கருதி அனல்மின் நிலையத்தில் செயல்பாட்டில் இருந்த அலகுகள் கடந்த மாதம் 16-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டது. பின்னர், மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வாரிய தலைவர் ராஜேஷ்லக்கானி ஆகியோர் கடந்த மாதம் 21-ந்தேதி அனல் மின்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, மீண்டும் மின்சார உற்பத்தியை தொடங்குவதற்கான சீரமைக்கும் பணிகளை விரைவுப்படுத்த உத்தரவிட்டனர்.
பொறியாளர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, அனைத்து பகுதிகளிலும் சீரமைப்பு பணிகள் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது. வெளி மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கனரக எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு இரவு பகலாக பொறியாளர்கள் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்றது.
குளிர்வு நீர் பாதைகள் 4 மீட்டருக்கும் அதிகமான ஆழம் கொண்டது என்பதால், நிலத்தில் இருந்து வரும் ஊற்று நீரை வெளியேற்றுவது சவாலான பணியாக இருந்தது. பல்வேறு நிலை பொறியாளர்கள் தலைமையில், பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் பணிகள் முடிக்க 2 மாதங்கள் தேவைப்படும் என்ற நிலையை மாற்றி 15 நாட்களுக்கு முன்பே கடந்த மாதம் 31-ந்தேதியன்று அலகு 4 மற்றும் 5-ல் மீண்டும் வெற்றிகரமாக மின்சார உற்பத்தி தொடங்கப்பட்டது.
தொடர்ச்சியாக குளிர்வு நீர் பாதை 1-ல் உள்ள சாம்பல் கழிவை அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. தனித்தனியாக பொறியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தொய்வின்றி தொடர்ந்த சீரமைப்பு பணிகள் காரணமாக அலகு 1 மற்றும் 3 ஆகியவற்றில் கடந்த 10-ந்தேதியும், அதேபோல், அலகு 2 போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு கடந்த 16-ந்தேதியும் மீண்டும் வெற்றிகரமாக முழுமையாக மின்சார உற்பத்தி தொடங்கப்பட்டது.
பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றாலும் அனைத்து பணிகளிலும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு, சிறு விபத்துகளின்றி இப்பணிகள் முழுமையும் நடைபெற்றுள்ளது. பெருமழை வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 5 அலகுகளையும் மிகக்குறுகிய காலத்தில் போர்க்கால அடிப்படையில் சரிசெய்து அதிகாரிகள் சாதனை படைத்தனர் என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.