புதிய தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடனுதவி வழங்கும் திட்டம்: ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்

உணவு பொருட்கள் உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் தொழில் தொடங்குவதற்கு ரூ.1 கோடி வரை கடனுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்...

புதிய தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடனுதவி வழங்கும் திட்டம்: ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்

உணவு பொருட்கள் உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் தொழில் தொடங்குவதற்கு ரூ.1 கோடி வரை கடனுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். 

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கடனுதவி பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்த மானியத்துடன் கூடிய கடன் திட்டம் மூலமாக உணவுப் பொருட்கள் உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடனுதவி வழங்கும் திட்டம், மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரையிலும் அரசு மானியமாக வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக்கள் தொழில் தொடங்கினால் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தொடக்கநிலை மூலதனமாக ரூ.40 ஆயிரம் வழங்கப்படும். தொழில் தொடங்கும் முதலீட்டாளர்கள் தங்களது மூலதனமாக 10 சதவீதம் பங்களிப்பு செய்ய வேண்டும். மீதம் 90 சதவீதம் வங்கிகளில் பிணையமில்லா கடனாக பெறலாம். இந்த திட்டமானது மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதிப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கடனுதவி பெற கல்வித் தகுதி, வயது வரம்பு ஏதுமில்லை. 

 

இந்த திட்டத்தின் கீழ் கடலை மிட்டாய், பழச்சாறு, ஊறுகாய் வகைகள், மாவு வகைகள், மரச்செக்கு எண்ணெய், திண்பண்டங்கள், மசாலா பொருட்கள், பால் பொருட்கள், இறைச்சி மற்றும் மீன் பதப்படுத்துதல் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தயாரித்து பதப்படுத்தும் தொழில்களைத் தொடங்கவும், ஏற்கனவே இயங்கி வரும் குறு நிறுவனங்களை விரிவாக்கம் செய்யவும் உதவி பெறலாம். மேலும் தொழில் தொடங்க தேவையான உரிமங்கள் மற்றும் சந்தைப்படுத்துதலை மேம்படுத்த தேவையான உதவிகளும் வழங்கப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண், பண்ணை மற்றும் கடல்சார் உணவுப் பொருட்கள் சார்ந்த தொழில்களைத் தொடங்க விருப்பமுள்ளவர்கள், சுய உதவிக் குழுவினர், உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் pmfme.mofpi.gov.in என்னும் இணையதள முகவரி மூலமாக விண்ணப்பிக்கலாம். அல்லது பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பைபாஸ் ரோடு, தூத்துக்குடி என்ற முகவரியில் அணுகி பயனடையலாம். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.