மோட்டார் போக்குவரத்து நிறுவனத்தினர் பதிவு சான்றை புதுப்பிக்க அறிவுறுத்தல்
மோட்டார் போக்குவரத்து நிறுவன உரிமையாளர்கள், எடையளவு கருவி உற்பத்தியாளர், பழுது பார்ப்பவர்கள் வருகிற 30-ஆம் தேதிக்குள் பதிவு சான்று, உரிமச்சான்றை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மோட்டார் போக்குவரத்து நிறுவன உரிமையாளர்கள் 1961-ம் ஆண்டு மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டத்தின் கீழ் ஏற்கனவே தங்களுக்கு வழங்கப்பட்ட பதிவு சான்றையும், சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் எடையளவு கருவிகள், பொருட்கள் உற்பத்தியாளர், விற்பனையாளர், பழுது பார்ப்பவர் உரிம சான்றை வருகிற 30-ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். 1971-ம் ஆண்டு ஒப்பந்த தொழிலாளர் சட்டத்தின் கீழ் பதிவு சான்று, உரிமச்சான்று பெற்ற நிறுவனங்கள் உரிய காலக்கெடுவுக்குள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்ததாரர் உரிம சான்றை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
அனைத்து வகையான உணவு நிறுவனங்களும், பேக்கரிகளும் 1956-ம் ஆண்டு உணவு நிறுவன சட்டத்தின் கீழ் ஏற்கனவே தங்களுக்கு வழங்கப்பட்ட பதிவு சான்றை தொழிலாளர் துறை இணையதளம் மூலம் 31.12.2023-க்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதுவரை பதிவு சான்று, உரிமச்சான்று பெறாத மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பேக்கரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் எடையளவு கருவி உற்பத்தியாளர், விற்பனையாளர், பழுது பார்ப்போர் ஆகியோர் தங்களது நிறுவனங்களுக்கான பதிவு, உரிம சான்றுகளை www.labour.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
உரிய வழிகளில் பதிவு, உரிம சான்று பெறாத அல்லது உரிய காலக்கெடுவுக்குள் புதுப்பித்து கொள்ளாத நிறுவனங்கள் மீது மேற்படி சட்டங்களின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.