“மூடாவிட்டால் ஓட்டு இல்லை!” – தூத்துக்குடி பொட்டலூரணி மக்கள் 21 கோரிக்கைகளுடன் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

“மூடாவிட்டால் ஓட்டு இல்லை!” – தூத்துக்குடி பொட்டலூரணி மக்கள் 21 கோரிக்கைகளுடன் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி பகுதியில் செயல்பட்டு வரும் மீன் கழிவு நிறுவனங்களுக்கு எதிராக மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். சுற்றுச்சூழல் மாசு, துர்நாற்றம், உடல்நல பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக, அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பொட்டலூரணி கிராம மக்கள் கூட்டத்தில் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டது. கிராமத்தில் செயல்படும் மூன்று மீன் கழிவு நிறுவனங்களையும் உடனடியாகவும் நிரந்தரமாகவும் மூடாவிட்டால், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

மேலும், போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும், பேருந்து வசதிகளை மேம்படுத்த வேண்டும், இரவு நேரங்களில் பேருந்துகள் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும், மின்விளக்கு வசதிகள் அமைக்க வேண்டும், பொட்டலூரணியை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தல் புறக்கணிப்பு முடிவை மாநில ஆளுநர், தலைமைச் செயலாளர், தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 22 அதிகாரிகளுக்கு மனுவாக அனுப்பியுள்ளனர்.

இந்த தகவலை போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.