பாதுகாப்பா? விபத்துக்கா? – தூத்துக்குடி பாளை சாலையில் வேகத்தடுப்பு வேலி சர்ச்சை; சமீபத்தில் பேரி கார்டில் மோதிய ஆட்டோ கவிழ்ந்து விபத்து!

பாதுகாப்பா? விபத்துக்கா? – தூத்துக்குடி பாளை சாலையில் வேகத்தடுப்பு வேலி சர்ச்சை; சமீபத்தில் பேரி கார்டில் மோதிய ஆட்டோ கவிழ்ந்து விபத்து!

தூத்துக்குடி – பாளையங்கோட்டை பிரதான சாலையில் உள்ள இசக்கி அம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள வேகத்தடுப்பு வேலி (பேரிகார்டு) குறித்து பொதுமக்கள் மத்தியில் கடும் சர்ச்சை எழுந்துள்ளது.

தூத்துக்குடியில் இருந்து மேற்கு திசை நோக்கி செல்லும் பெரும்பாலான வாகனங்கள் இந்த சாலையையே பயன்படுத்துகின்றன. வேலைக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் தினமும் இந்த வழியாகவே பயணம் செய்கிறார்கள்.

இந்த நிலையில் வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்காக சாலையின் குறுக்கே பேரி கார்டு / தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வேலி பாதுகாப்பை வழங்குவதற்குப் பதிலாக விபத்துகளை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்குகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சாலையின் குறுக்கே பாதிக்கும் மேல் பகுதியை மறைக்கும் வகையில் இந்த தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருப்பதால் வாகன ஓட்டிகள் திடீரென கட்டுப்பாட்டை இழக்கும் சூழல் உருவாகிறது. இதனால் அப்பகுதியில் சிறு சிறு விபத்துகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பேரி கார்டில் மோதிய ஆட்டோ ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவமும் நடந்துள்ளது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சமும் அதிருப்தியும் நிலவுகிறது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரக்குழு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநகர செயலாளர் எம்.எஸ். முத்து கூறுகையில்:

“மக்களின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட இந்த வேலி தற்போது விபத்துகளுக்கே காரணமாக மாறியுள்ளது. எனவே மாவட்ட காவல்துறை உடனடியாக தலையிட்டு, பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் தடுப்பு வேலியை மாற்றி அமைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

இதனால் அப்பகுதியில் பாதுகாப்பான போக்குவரத்து ஏற்படுவதற்காக சம்பந்தப்பட்ட துறைகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.