மது கட்டுப்பாடு கோரி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு – சமூக ஆர்வலரின் நூதனப் போராட்டம்

மது கட்டுப்பாடு கோரி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு – சமூக ஆர்வலரின் நூதனப் போராட்டம்

மது காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க, மருத்துவச் சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே மது வழங்க வேண்டும் என வலியுறுத்தி, உடலில் மது பாட்டில்களைக் கட்டிக்கொண்டு சமூக ஆர்வலர் ஒருவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன், மதுவிற்கு எதிராக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருபவர். முன்னதாக, காலி மது பாட்டில்களை அரசு டாஸ்மாக் கடைகளிலேயே திரும்பப் பெற வேண்டும் என்ற அவரது போராட்டம் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று காலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பாலகிருஷ்ணன், தனது உடலில் மூன்று மது பாட்டில்களை கயிறு மூலம் கட்டிக்கொண்டு நூதனமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“தமிழக அரசு டாஸ்மாக் கடைகளில் ஒருவருக்கு அளவில்லாமல் மது வழங்கப்படுவதால், குடிமக்களின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் பல குடும்பங்கள் சிதைவதோடு, இளம் பெண்கள் விதவையாகும் அவலநிலை உருவாகிறது. எனவே, மதுப்பிரியர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் அடிப்படையில் குறைந்த அளவு மது வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மது பாட்டில்களுடன் அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற பாலகிருஷ்ணனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். உடலில் கட்டப்பட்டிருந்த மது பாட்டில்களை அகற்றுமாறு போலீசார் உத்தரவிட்டனர். அதற்கு அவர்,
“என்னால் கழற்ற முடியாது, நீங்களே கழற்றிக் கொள்ளுங்கள்” எனக் கூறியதால், போலீசாருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இறுதியில், காவல்துறையினர் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் இணைந்து அவரது உடலில் கட்டப்பட்டிருந்த மது பாட்டில்களை அகற்றினர். பின்னர், இவ்வகை பொருட்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரக்கூடாது என எச்சரித்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, தனது கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க பாலகிருஷ்ணனுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நூதனப் போராட்டத்தால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.