தூத்துக்குடியில் பரபரப்பு... காவல் நிலையத்தில் புகுந்து போலீஸ்காரருக்கு அருவாள் வெட்டு: வாலிபர் கைது!

தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் போலீஸ்காரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் போலீஸ்காரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல் மேல தெருவில் வசிப்பவர் இசக்கிமுத்து மகன் சுரேஷ் பாபு (27). இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் போலீசாராக வேலை பார்த்து வருகிறார். விடுமுறைக்கு ஊருக்கு வந்தவர் கடந்த வாரம் முடிவைத்தானேந்தல் கிராமத்தில் நடந்த ஒரு திருமண வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அங்கு ஏற்பட்ட தகராறில் இவரது பிரேஸ்லெட் காணாமல் போய்விட்டதாம்.

இதை இவர் பக்கத்து வீட்டை சேர்ந்த பேச்சிமுத்து மகன் ராஜா (22) என்பவர் தான் திருடி இருப்பார் என்று அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று ராஜாவிடம் சுரேஷ்பாபு ப்ரேஸ்லெட் சம்பந்தமாக கேட்டாராம். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் சுரேஷ்பாபு புதுக்கோட்டை காவல்நிலத்தில் புகார் செய்வதற்காக வந்தாராம். அங்கு புதுக்கோட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசியிடம் புகார் மனுவை கொடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த ராஜா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுரேஷ்பாபுவை சரமாரியாக வெட்டினாராம். காவல் நிலையத்திற்குள் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அவரை சுற்றிவளைத்து ராஜாவை கைது செய்தனர். பின்னர் உடனடியாக படுகாயம் அடைந்த சுரேஷ்பாபுவை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை காவல் நிலையத்தில் போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.