மின்சாரம் தாக்கி வியாபாரி பலி: ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாநகராட்சிக்கு உத்தரவு!
மின்சாரம் தாக்கி இறந்த வியாபாரி குடும்பத்துக்கு தூத்துக்குடி மாநகராட்சி ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.
தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தை சேர்ந்த லிங்கசிவா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: எனது கணவர் ஜெயகணேசன். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். எங்கள் தோட்டத்தில் விளையும் காய்கறிகளை தூத்துக்குடி காமராஜ் காற்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று என் கணவர் விற்பனை செய்து வருவார். கடந்த ஆண்டு மார்க்கெட்டில் காய்கறிகளை விற்றுவிட்டு நடந்து வந்தார்.
அங்குள்ள அண்ணா சிலையைச்சுற்றி அமைக்கப்பட்டு இருந்த இரும்பு வேலியை தொட்டுள்ளார். அதில் மின்கசிவு இருந்ததால், என் கணவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த அண்ணா சிலையானது, அரசியல் கட்சி ஒன்றின் பராமரிப்பில் இருந்து வருகிறது. அங்கு மின் இணைப்பை தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் பெயரில் பெற்று உள்ளனர். பராமரிப்பு குறைபாடு காரணமாக என் கணவர் இறந்துவிட்டார். என் கணவர் இறப்புக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு: இந்த விவகாரத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மின்வாரியம் ஆகியவை தாக்கல் செய்த அறிக்கையில் நாங்கள் பொறுப்பு கிடையாது என கூறி உள்ளனர். ஆனால் சிலைக்கு மின் இணைப்பு தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் பெயரில்தான் வாங்கப்பட்டு உள்ளது. மின் கட்டணத்தை அரசியல் கட்சி ஒன்று செலுத்தி வருவதாக தெரிகிறது.
அவ்வாறு இருக்கும்போது மனுதாரர் கணவர், இறந்த விவகாரத்தில் மாநகராட்சி தரப்பினர் ஒதுங்கிக்கொள்ள முடியாது. மனுதாரர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க மாநகராட்சிதான் பொறுப்பு. எனவே ரூ.15 லட்சத்தை மனுதாரர் குடும்பத்தினருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
-------------------------------------------------------------------
உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தெரிந்துகொள்ள...
WHATSAPP GROUP LINK 1 :- CLICK HERE
WHATSAPP GROUP LINK 2 :- CLICK HERE