தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தண்ணீர் விநியோகம் தடை – பொதுமக்கள் அவதி; உடனடி நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை..!

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தண்ணீர் விநியோகம் தடை – பொதுமக்கள் அவதி; உடனடி நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை..!

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக குடிநீர் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

தூத்துக்குடி மாநகராட்சியில் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு அன்றாடம் தேவைப்படும் குடிநீர், வல்லநாடு நீரேற்ற நிலையம் மூலமாக விநியோகிக்கப்படுகிறது. இதுவரை பெரும்பாலான பகுதிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், தற்போது பக்கில்புரம், பங்களா தெரு, ராமசாமிபுரம், காமராஜர் சாலை மேற்கு, காமராஜர் கல்லூரி எதிரே, ராஜு நகர், பால்பாண்டி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக தண்ணீர் விநியோகம் இடம்பெறவில்லை. இதனால் பொதுமக்கள், குறிப்பாக பள்ளி மாணவர்கள், முதியவர்கள் என பலர் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மாநகராட்சி  அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மக்கள் கேன் தண்ணீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

முனியசாமிபுரம் பகுதி மக்களின் வாக்குமூலம்:

“எங்கள் பகுதிக்கு கடந்த நான்கு நாட்களாக தண்ணீர் வரவில்லை. டேங்க் அருகே இருந்தும் தினசரி தண்ணீர் கிடைக்கவில்லை. பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள், வயதானவர்கள் என அனைவரும் மிகுந்த சிரமத்துடன் இருக்கின்றனர். புகார் அளித்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை, தண்ணீர் பெரும்பாலும் கலங்களாகவே வருகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால் பைப் லைன் உடைந்து விட்டது, அடைப்பு ஏற்பட்டுள்ளது என அடிக்கடி காரணம் கூறி வருகின்றனர்.” என அவர்கள் கூறுகின்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேண்டுகோள்:

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாநகரச் செயலாளர் திரு. எம். எஸ். முத்து கூறியதாவது:

“தூத்துக்குடி மாநகராட்சியில் வீடுகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வழங்கப்படும் நடைமுறை இருந்தது. ஆனால் தற்போது பல பகுதிகளில் ஐந்து நாட்களாக தண்ணீர் வழங்கப்படவில்லை. தமிழக முதல்வரின் உத்தரவில் பள்ளிகளில் குழந்தைகளுக்கான வாட்டர் பில் திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் தற்போதைய தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, குழந்தைகள் கூட தங்கள் வீடுகளில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.”

“எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தண்ணீர் விநியோகத்தை தொடங்க வேண்டும். அதேபோல், போர்கால அடிப்படையில் மாற்றுத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.