தூத்துக்குடியில் மது போதையில் கால்வாயில் விழுந்த தொழிலாளர் பலி – பரிதாப சம்பவம்

தூத்துக்குடியில் மது போதையில் கால்வாயில் விழுந்த தொழிலாளர் பலி – பரிதாப சம்பவம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மது போதையால் நிகழ்ந்த பரிதாப சம்பவம் ஒன்று பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தூத்துக்குடி 3-வது மைல் பகுதியில் உள்ள பக்கிள் ஓடை பாலத்தின் கீழ் கழிவுநீர்க் கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

சடலம் கால்வாய்க்குள் சிக்கியிருந்ததால், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் த.கார்த்திகேயன் தலைமையில் வந்த வீரர்கள் சடலத்தை மீட்டனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் தூத்துக்குடி ராஜீவ் நகர் 5-வது தெருவைச் சேர்ந்த செல்வம் (45) என்பதும், அவர் எப்.சி.ஐ குடோனில் மூடை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

நேற்று இரவு வேலை முடிந்து பாலத்தின் மேல் அமர்ந்து மது அருந்திய போது, அதிகமான போதையால் நிலைதடுமாறி அருகிலிருந்த கழிவுநீர்க் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், செல்வத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த செல்வத்திற்கு விஜயலட்சுமி என்ற மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். குடும்பத்தின் ஒரே ஆதாரமான இவர் உயிரிழந்ததால், அப்பகுதியில் பெரும் சோகநிலை நிலவுகிறது.