தூத்துக்குடியில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கைது

தூத்துக்குடியில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் நடவடிக்கையாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் முருகன் தலைமையில், சார்பு ஆய்வாளர் கணபதி மற்றும் போலீசார் நேற்று (மார்ச் 23) அய்யனடைப்பு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில், அந்த வாகனத்தில் இருந்தவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்த மக்சன் சாமுவேல் (23) மற்றும் இசக்கி செல்வம் (27) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் விற்பனைக்காக 8 கிலோ கஞ்சா எடுத்துச் சென்றதும் போலீசாருக்கு உறுதியாகியது.

இதையடுத்து, போலீசார் இருவரையும் உடனடியாக கைது செய்து, அவர்களிடமிருந்து 8 கிலோ கஞ்சா மற்றும் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, மேலும் இதில் தொடர்புடையவர்கள் உள்ளனரா என்பதற்கான தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.