அதிமுக-பாஜக கூட்டணி மூழ்கும் கப்பல்... தேர்தலுக்குப் பிறகு அதிமுக இருக்கும் தானா?"- காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கடும் தாக்கு

அதிமுக-பாஜக கூட்டணி மூழ்கும் கப்பல்... தேர்தலுக்குப் பிறகு அதிமுக இருக்கும் தானா?"- காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கடும் தாக்கு

அதிமுக–பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் இயற்கைக்கு எதிரான கூட்டணி என்றும், அது மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி என்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் செல்வபெருந்தகை கடுமையாக விமர்சித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட வருகை தந்த  காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் செல்வப் பெருந்தகை தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில்  கூறியதாவது:

தமிழ்நாட்டில் அதிமுக–பாஜக கூட்டணி என்பது பொருந்தாத கூட்டணி. ஆரம்பத்திலிருந்தே இது குறித்து நாங்கள் கூறி வருகிறோம். மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்த கூட்டணி தற்போது “மூழ்கும் கப்பல்” போன்றதாக உள்ளது. அந்த கப்பல் மூழ்கப்போகிறது என்பது தெரியாமல் சிலர் அதில் ஏறிவிட்டார்கள். தற்போது அவர்களுக்கு இறங்குவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.

மேலும் , இந்தியா கூட்டணி என்பது திமுக தலைமையில் உள்ள வலிமையான கூட்டணி. இந்த கூட்டணி தமிழ்நாட்டு மக்களை தலைநிமிரச் செய்யும் கூட்டணி. ஆனால் அதிமுக–பாஜக கூட்டணி தமிழ்நாட்டு மக்களை தலைகுனியச் செய்யும் கூட்டணி.

தமிழ்நாட்டின் உரிமைகள் அனைத்தையும் டெல்லியில் உள்ள ஒன்றிய அரசு முன் அடகு வைப்பது போல அதிமுக செயல்படுகிறது என்றும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறும் இடங்களில் கையொப்பமிட்டு தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுக்கிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சி தனியாக இருக்கும் தானா அல்லது பாஜக அதிமுகவை விழுங்கிவிடுமா என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது என்றும் செல்வபெருந்தகை தெரிவித்தார்.

பீகாரில் முதலமைச்சராக இருந்த நிதீஷ் குமாரை பதவியில் இருந்து நீக்கி மாநிலங்களவை உறுப்பினராக அனுப்பிய சம்பவத்தை எடுத்துக்காட்டாக கூறிய அவர், அதுபோன்ற நிலை தமிழ்நாட்டிலும் ஏற்படக்கூடும் என்ற அச்சம் இருப்பதாக தெரிவித்தார்.

அதிமுகவை முழுமையாக கைப்பற்றும் திட்டங்களை பாஜக மேற்கொண்டு வருவதாகவும், அதில் அதிமுக ஏமாந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க பல முன்னோர்கள் போராடியுள்ளனர். பெருந்தலைவர் காமராஜர் முதல் முத்தமிழறிஞர் கலைஞர் வரை தமிழ்நாட்டின் வளங்களையும் உரிமைகளையும் பாதுகாத்து மக்களை தலைநிமிரச் செய்துள்ளனர். ஆனால் இன்றைய அரசியல் சூழலில் சிலர் டெல்லி அரசிடம் அனைத்தையும் அடகு வைத்து அரசியல் செய்கிறார்கள் என்று அவர் விமர்சித்தார்.

தமிழ்நாட்டு மக்கள் இதை நன்றாக கவனித்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் உரிமைக்காக யார் குரல் கொடுக்கிறார்கள், யார் டெல்லிக்குப் பணிகிறார்கள் என்பதையும் மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். இந்த தேர்தலில் மக்கள் பெரிய பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் கூறினார்.

1996 தேர்தலில் நடந்த மாற்றத்தைப் போலவே இந்த தேர்தலிலும் அதே மாதிரியான முடிவுகள் வரும் எனவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராக கூட வர முடியாது என்ற கருத்துகளும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

பாஜகவுடன் இணைந்ததால் தமிழ்நாட்டு மக்கள் அதிமுகவை புறந்தள்ளி விட்டதாக பல அரசியல் ஆய்வுகள் கூறுகின்றன என்றும், தேர்தலுக்குப் பிறகு யார் எதிர்க்கட்சித் தலைவர் என்பது தெரிய வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தேர்தல் கூட்டணி தொடர்பான முடிவுகள் குறித்து பேசுகையில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை தான் இறுதி முடிவுகளை எடுக்கும் என்று கூறினார்.

ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது என்றும், கூட்டணி மற்றும் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், எங்கு வன்முறை நடந்தாலும் அதனை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்றார்.

அதே நேரத்தில், பாஜக ஆளும் மாநிலங்களான உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நடைபெறும் வன்முறைகள் குறித்து பேச வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

உத்திரப்பிரதேசத்தில் நடந்த பல கொடூர சம்பவங்களை எடுத்துக்காட்டாக கூறிய அவர், தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகள் அங்கு அதிகமாக நடைபெறுகின்றன என்றும் குற்றம்சாட்டினார்.

மனிதநேயத்தை மதிக்கும் யாரும் வன்முறை, சாதி அடக்குமுறை மற்றும் கலவரங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அத்தகைய சம்பவங்கள் எங்கும் நடைபெறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து பேசுகையில், சில சம்பவங்கள் நடந்தாலும் அவற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் கூறினார்.

மேலும், ஒன்றிய அரசின் அறிக்கையிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு உகந்த மாநிலம் தமிழ்நாடு தான் என்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றும் செல்வபெருந்தகை குறிப்பிட்டார்.