தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்! சசிகலா – ராமதாஸ் கூட்டணி அறிவிப்பு

தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்! சசிகலா – ராமதாஸ் கூட்டணி அறிவிப்பு

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத திருப்பமாக, 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வி.கே. சசிகலா மற்றும் டாக்டர் ராமதாஸ் கைகோர்த்துள்ளனர்.

குடும்பப் பூசல் மற்றும் அரசியல் பிளவுகளுக்கு இடையே, தைலாபுரம் தோட்டத்தில் நடந்த சந்திப்பிற்குப் பிறகு 'துரோக அடையாளங்களை வீழ்த்துவோம்' என்ற அதிரடி முழக்கத்துடன் இந்தப் புதிய கூட்டணி உதயமாகியுள்ளது.

அன்புமணி மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர் அதிமுக-பாஜக கூட்டணியில் இருக்கும் நிலையில், சசிகலா-ராமதாஸ் எடுத்துள்ள இந்தத் தனிப்பாதை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தேர்தல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதலைத் தொடர்ந்து, இருவரும் தனி அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். அன்புமணி தலைமையிலான பா.ம.க இந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் இணைந்துள்ளது. கூட்டணியில் அன்புமணிக்கு ராஜ்ய சபா எம்.பி பதவியும் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், டாக்டர் ராமதாஸ் தனது தலைமையிலான பா.ம.க சட்டமன்றத் தேர்தலில் தனி கூட்டணி அமைக்கும் என்று அறிவித்தார். பா.ம.க - பா.ஜ.க இடம்பெறும் கூட்டணியில் வி.சி.க இடம்பெறாது என்று திருமாவளவன் கறாராக அறிவித்ததால் தி.மு.க கூட்டணிக்கான வழியும் தடைபட்டது.

மறுபுறம், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த வி.கே.சசிகலாவின் அக்கா மகனும் அ.ம.மு.க பொதுச் செயலாளருமான டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் இணைந்தார். இதனால், வி.கே.சசிகலா, அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என புதிய கட்சியைடத் தொடங்கி சட்டமன்றத் தேர்தலில் சந்திப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில், வி.கே. சசிகலா இன்று திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, வி.கே. சசிகலா தலைமையிலான அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் மருத்துவர் ச. ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய இரு கட்சிகளும் இணைந்து 2026ட்டமன்றத் தேர்தலுக்கான புதிய கூட்டணி அமைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இது தொடர்பாக வி.கே.சசிகலா மற்றும் டாக்டர் ராமதாஸ் இருவரும் கையொப்பமிட்டு கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இணைந்து கூட்டணி அமைக்கிறது என்பதி மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தமிழகத்தின் துரோக அடையாளங்களைக் களைந்து, மக்கள் நலன், சுயமரியாதை மற்றும் தன்னாட்சியை மேம்படுத்தும் விதமாக இந்தக் கூட்டணி செயல்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.