விளாத்திகுளம் அருகே கொலை செய்யப்பட்ட 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவியின் உடல் தகனம்..!

விளாத்திகுளம் அருகே கொலை செய்யப்பட்ட 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவியின் உடல் தகனம்..!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கடந்த 10ந்தேதி இயற்கை உபாதை கழிப்பதற்காக காட்டுப் பகுதிக்குச் சென்ற பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக 10 தனிப் படைகள் அமைத்து போலீசார் குற்றவாளியை தேடி வந்த நிலையில் ஒன்பது நாட்கள் கழித்து இந்த கொலை வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த தர்ம முனிஸ்வரன் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.  

 குற்றவாளியை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என்று மாணவியின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். உடற்கூராய்வு முடிந்து மாணவியின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

  இந்த நிலையில் கொலை வழக்கு தொடர்பாக தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்ட நிலையில் உடலைப் பெற்றுக் கொள்ள மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

இதையெடுத்து மாணவியின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் ஒரு கார் மற்றும் இரண்டு வேன்களில் புறப்பட்டு தூத்துக்குடி கிளம்பி சென்று உடலை பெற்றுக்கு கொண்டு ஊருக்கு கொண்டு வந்தனர்.ஊர் முகப்பில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக மாணவியின் உடல் மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.அமைச்சர் கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு மற்றும் கிராம மக்கள் என 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர்.ஆம்புலன்ஸில் இருந்து இறக்கப்பட்ட மாணவியின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். உயிரிழந்த மாணவியின் சகோதரி மயக்கம் அடைந்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் தண்ணீர் தெளித்து உக்கர வைத்தனர்

தொடர்ந்து பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.மாணவியின் உடலுக்கு அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜீ, முன்னாள் எம். எல். ஏ. சின்னப்பன், மானூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் கல்லூர் வேலாயுதம், பாஜக வடக்கு மாவட்ட தலைவர் சரணகிருஷ்ணன்,தவெக அஜிதா ஆக்னல்,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வடக்கு மாவட்ட தலைவர் ராஜகோபால் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் அஞ்சலி செலுத்தினர். இறுதி சடங்குகள் முடிவடைந்து எரிமேடையில் மாணவியின் உடல் தகனம் செய்யப்பட்டது