தனியார் நிறுவன பாதுகாவலர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி முகாம் : தீயணைப்புத்துறை நடவடிக்கை!

தனியார் நிறுவன பாதுகாவலர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி முகாம் : தீயணைப்புத்துறை நடவடிக்கை!

தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்தில், தனியார் நிறுவன பாதுகாவலர்களுக்கு தீத்தடுப்பு குறித்த சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குனர் சீமா அகர்வால் உத்தரவின் படியும், திருநெல்வேலி தென்மண்டல துணை இயக்குனர்  சரவண பாபு அறிவுறுத்தலின் படியும், தூத்துக்குடி மாவட்டத்தில் தீ விபத்துகளைத் தடுக்கும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி தீயணைப்பு நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரியும் பாதுகாவலர்களுக்கு தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சி முகாம் தூத்துக்குடி மாவட்ட அலுவலர்  கருணாகரன் மற்றும் நிலைய உதவி மாவட்ட அலுவலர் கோமதி அமுதா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாதுகாவலர்களுக்கு, தீ விபத்து ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய அவசரகால நடவடிக்கைகள், தீயணைப்பு கருவிகளை கையாளும் விதம் மற்றும் பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் முறைகள் குறித்து விரிவான செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

பயிற்சியின் நிறைவாக, கலந்துகொண்ட அனைத்து பாதுகாவலர்களுக்கும் தீத்தடுப்பு விழிப்புணர்வு குறித்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மேலும், பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த பாதுகாவலர்களுக்கு தீயணைப்புத்துறையின் சார்பில் பயிற்சிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அவசர காலங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரும் முன்னரே, அங்குள்ள பாதுகாவலர்கள் முதலுதவி மற்றும் தீயணைப்பு பணிகளைத் திறம்பட மேற்கொள்வதன் மூலம் பெரும் உயிர்ச் சேதங்களையும், சொத்துச் சேதங்களையும் தவிர்க்க முடியும் என அதிகாரிகள் இக்கூட்டத்தில் வலியுறுத்தினர்.