தூத்துக்குடியில் பயங்கரம்! மதுபானக் கடை அருகே வட மாநிலத் தொழிலாளி அடித்துக் கொலை – ஒருவரை கைது செய்த போலீசார், 2 பேருக்கு தீவிர வலைவீச்சு!

தூத்துக்குடியில் பயங்கரம்! மதுபானக் கடை அருகே வட மாநிலத் தொழிலாளி அடித்துக் கொலை – ஒருவரை கைது செய்த போலீசார், 2 பேருக்கு தீவிர வலைவீச்சு!

தூத்துக்குடியில் மதுபானக் கடை அருகே வட மாநிலத் தொழிலாளர்களுக்குள் ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ளது. கட்டையால் தாக்கப்பட்ட 27 வயது தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் மில்களில் வட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு வேலை முடிந்த பிறகு சில தொழிலாளர்கள் தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலை 3-ஆம் மைல் பகுதியில் உள்ள மதுபானக் கடை அருகே மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.

அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறு திடீரென மோதலாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிலர் அருகில் கிடந்த கட்டையை எடுத்து 27 வயது மதிக்கத்தக்க தொழிலாளியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் தலையில் மற்றும் உடலின் பல பகுதிகளில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரை கைது செய்வதற்காக தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

உயிரிழந்த தொழிலாளியின் முழுமையான அடையாள விவரங்கள், அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் மற்றும் கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி நகரின் முக்கிய பகுதியில் நடைபெற்ற இந்த கொலைச் சம்பவம் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர் வட்டாரங்களில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

– TUTY VISION NEWS DESK ????