தூத்துக்குடியில் NEET 2026 தேர்வு: 2,015 மாணவர்கள் எழுத தயாராகினர் – தேர்வு நாளில் கடும் கட்டுப்பாடுகள்!

தூத்துக்குடியில் NEET 2026 தேர்வு: 2,015 மாணவர்கள் எழுத தயாராகினர் – தேர்வு நாளில் கடும் கட்டுப்பாடுகள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் NEET (UG) 2026 தேர்வு வரும் ஜூன் 21, 2026 (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் எட்டையபுரம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 5 தேர்வு மையங்களில் மொத்தம் 2,015 தேர்வர்கள் எழுதவுள்ளனர்.

தேர்வை முன்னிட்டு காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, போக்குவரத்துத் துறை, மின்சார வாரியம், சுகாதாரத் துறை, பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் மாவட்ட ஆட்சியர் திரு. விஷு மகாஜன், இ.ஆ.ப. தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேர்வு நாளில் எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு சிரமமின்றி சென்றடைய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தேர்வர்கள் தேர்வு நாளன்று காலை 11.00 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும். பிற்பகல் 1.30 மணிக்குப் பிறகு வருபவர்களுக்கு தேர்வு மையத்திற்குள் அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்வுக்கூடத்திற்குள் செல்போன், ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர், பேஜர், மின்னணு தகவல் சேமிப்பு சாதனங்கள், குறிப்பேடுகள், புத்தகங்கள், உறைகள் மற்றும் கைப்பைகள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்லக் கூடாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.