ஓட்டப்பிடாரம் சீட் மாற்றம் – எதிர்ப்புக்கு அனிதா ராதாகிருஷ்ணன் சொன்ன பதில்..!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக (திமுக) வேட்பாளராக அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக வாய்ப்பு வழங்கிய கட்சி தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அவர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்த அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகம் முழுவதும் திமுக வெற்றி பெறும் நிலை உள்ளது. அந்த வகையில் திருச்செந்தூரிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற மக்கள் ஆதரவை நாடி கடுமையாக உழைப்போம்” என்றார்.

மேலும், “கடந்த தேர்தலில் 27 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். இந்த முறை 50 ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகமான வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்” என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கிடையில், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் சீட்டிங் எம்எல்ஏ சண்முகையாவிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாதது தொடர்பாக அப்பகுதியில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதுகுறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதிலளித்த அவர், “யார் சிறப்பாக பணியாற்றுகிறார்களோ அவர்களைத் தலைவர் வேட்பாளர்களாக அறிவித்துள்ளார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலத்தில் வாய்ப்பு வழங்கப்படும். அதனால் யாரும் அதிருப்தி கொள்ளத் தேவையில்லை” என்றார்.

மேலும், “ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராமஜெயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்” என்றும் அவர் தெரிவித்தார்.