இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10லட்சம் மதிப்புள்ள பூச்சிமருந்து, பீடி இலைகள் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10லட்சம் மதிப்புள்ள பூச்சிமருந்து, பீடி இலைகள் பறிமுதல்!

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், பூச்சி மருந்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்கள், பீடி இலை, கஞ்சா உள்ளிட்டவை கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் கடலோர காவல் படையினர், கடலோர பாதுகாப்பு போலீசார் மற்றும் உளவுப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மொட்ட கோபுரம் கடற்கரையில் வைத்து கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதா, உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், தலைமை காவலர் ராமர் இருதயராஜ் ஆகியோர் இன்று அதிகாலை 3 மணியளவில் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கு இடமாக அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர்.

அப்போது அதில் 300 கிலோ பீடி இலை, 425 கிலோ கட்டிங் செய்த பீடி இலை, பூச்சிகொல்லி மருந்து 17 பண்டல் இருந்தது. இதனை சட்ட விரோதமாக இலங்கைக்கு கடத்த இருந்தது தெரிய வந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.10லட்சம் ஆகும். இதையடுத்து பீடி இலைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து, தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.