தூத்துக்குடியில் தீபாவளி பாதுகாப்பு தீவிரம்: ட்ரோன் கேமரா மூலம் நகர் பகுதிகள் கண்காணிப்பு!

தீபாவளி திருநாளை முன்னிட்டு தூத்துக்குடியின் மையப்பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரின் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாளை தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி நகரப் பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் உட்பட மாவட்டத்தின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் மற்றும் பொருள்கள் வாங்க பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான தூத்துக்குடி நகர பகுதிகள் முழுவதும் இரவிலும் துல்லியமாக பார்க்கும் ட்ரோன் கேமரா மூலம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரின் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆய்வு செய்து, வாகனம் நிறுத்துமிடங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் உட்பட அனைத்து முக்கிய இடங்களிலும் குற்ற சம்பவங்கள் நடவாமல் தடுக்கும் பொருட்டும் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதியும் ட்ரோன் கேமரா மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.