ஏரலில் தந்தை-மகனை போலீசார் தாக்கியதாக பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்!

ஏரலில் தந்தை-மகனை போலீசார் தாக்கியதாக பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்!

ஏரலில் தந்தை- மகனை போலீசார் தாக்கியதாக கூறி பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள கோட்டூர் ஊரைச் சேர்ந்தவர் அக்னிமுத்து. இவர் மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக வேலை செய்து வருகிறார். இவரது மகன் முத்து மதன் (20). இவர் முத்தையாபுரம் தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயின்று வருகிறார்.

நேற்று இரவு அக்னிமுத்து மற்றும் அவரது மகன் முத்து மதனும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஏரல் சினிமா தியேட்டர் வளைவு பாதையில் திரும்பும் போது, எதிரே ஏரல் போலீஸ்காரர் அஜ்மீர் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோத முயன்றது. அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. 

இதில் முத்து மதன் தலையில் பலத்த காயத்துடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும், போலீஸ் அஜ்மீர் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதனை அறிந்த அக்னி முத்து உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இரவு 10:30 மணியளவில் ஏரல் காவல் நிலையம் அருகே திடீர் சாலைமறியல் செய்தனர். 

தந்தை-மகனை போலீசார் தாக்கியதாக கூறி கோஷங்களை எழுப்பினர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி நிரேஷ், ஏரல் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.