தூத்துக்குடியில் பணியின் போது மதுபோதையில் இருந்த 3 போலீசார் சஸ்பெண்டு – மாவட்ட எஸ்பி சிலம்பரசன் உத்தரவு

பணியின் போது மதுபோதையில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசாரை சஸ்பெண்டு செய்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி சிலம்பரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் போலீசார் பணியின் போது, கவனமாகவும், குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாத வகையில் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும் என்று எஸ்பி சிலம்பரசன் போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளார். 

இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் பணியில் மதுபோதையில் இருந்ததாக போலீஸ் ஏட்டு அண்ணாத்துரை, குளத்தூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன், முத்தையாபுரம் ஏட்டு தனுஷ்கோடி ஆகியோர் மீது எஸ்பிக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து அவரது உத்தரவின் பேரில் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

இதில் அந்த 3பேரும் பணியில் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 3 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றி சூப்பிரண்டு உத்தரவிட்டார். தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை அடிப்படையில் அந்த 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டு உள்ளார். இது தூத்துக்குடி மாவட்ட போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.